Friday, October 12, 2012

முதலாயிரம் ---பெரியாழ்வார் திருமொழி -- 1,2,3

திருப்பல்லாண்டு 















1 . பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா !உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு .

உரை :முஷ்டிகன் , சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்று உன் திருத் தோள்களின் பலத்தை நிறுவிய பகவானே !உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன் சிவந்த திருவடியின் அழகுக்குப் பல்லாண்டு.மனிதக் கணக்கின் படியான பல்லாண்டுகளும் பல பிரமன்களுடைய பல நூறாயிரம் வருடங்களும் நீ குறைவில்லாத பாதுகாப்புடன் வாழ்க!


2 . அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி 
ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற 
மங்கையும் பல்லாண்டு;
வடிவார்சோதி வலத் துறையும் சுடர் 
ஆழியும் பல்லாண்டு;
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச 
சன்னியமும் பல்லாண்டே.

உரை:அடியோங்களுக்கும் உனக்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பு ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கட்டும்.உன் வலத் திருமார்பில் வாழ்கின்ற மகாலட்சுமி உன்னுடன் நித்தியமாகக் கூடி இருக்க வேண்டும்.பகவானே ! உன் வலக்கரத்தில் விளங்கும் ஒளி கூடிய சக்கரம் பல்லாண்டுகள் நிலைக்கட்டும்.யுத்தத்தில் புகுந்து முழங்கும் உன் பாஞ்சசன்னிய ஆயுதமும் பல்லாண்டு நிலைக்கட்டும்.


3 .வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து 
மண்ணும் மனமும் கொண்மின்;
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் 
குழுவினில் புகுத லொட்டோம்;
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் 
இராக்கதர் வாழ் இலங்கை 
பாழாளாகப் படை பொருதானுக்குப் 
பல்லாண்டு கூறுதுமே.

உரை :கைங்கர்யமே உறுதிப்பொருள் என்னும் நோக்கம் உடையவர்கள் ஆகில் ,நீங்கள் திருமுளைத் திருநாளில் புழுதி மண் சுமக்க வாருங்கள்.சோற்று வாழ்விற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பீர்களாயின்,எங்கள் கூட்டத்திலே சேர அனுமதியோம்.நாங்கள் மூவேழு தலை முறைகளிலும் எவ்விதக் குற்றமும் இன்றி உள்ளோம்.இலங்கையையும் அங்கே வாழ்ந்த அரக்கர்களையும் அழிந்த எம்பிரானுக்கு ,இன்று நாங்கள் திருப்பல்லாண்டு பாடுகிறோம்.

Monday, September 24, 2012

திவ்ய ப்ரபந்தம்








ஆழ்வார்கள் காலம் தொட்டு இன்று வரை மனிதப்பிறவி எடுத்து உண்டிக்கும் ,உடைக்குமே மனிதன் அலைகிறான்.

எம்பெருமான் அரங்கனை எண்ணாமல் அலைந்தவர்கள் பேரின்பம் கண்டதும் இல்லை.அவர்தம் பெயரும் செயலும் நிலைத்து நின்றதும் இல்லை.



ஆழ்வார்கள் ஸ்ரீமந் நாராயணனையே பரம் பொருளாக வழிபட்டார்கள் அவனைப்பற்றிய அனுபவ அருளிச் செயல் பாசுரங்கள். எம்பெருமானின் கல்யாண குணங்களே இவற்றின் பாடுபொருள்கள் ஆகும்.
பகவத் பக்தி, பாகவ பக்தி, ஆசார்ய பக்தி ஆகிய மூன்றினையும் பற்றி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

''முதலாயிரம் ''
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் பகுதியாக உள்ளது.
இதில் 947 பாசுரங்கள் உள்ளன.

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு பொங்கும் பரிவாலே புறப்பட்ட மங்களா சாசனம் ஆகும். அவருடைய திருமொழியில் ஆழ்வார் கண்ணனின் மேன்மைகளைத் தாயான நிலையில் அனுபவிக்கிறார்.
 ஆண்டாளின் திருப்பாவை வேதம் அனைத்துக்கும் வித்தாக , கைங்கர்யத்தை வலியுறுத்தும் நோன்புப் பாடலாக மிளிர்கிறது.நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் தெய்வக் காதல் பள்ளமடையாய்ப் பாய்கிறது.
 குலசேகர் தம் திருமொழியில் ,தாம் அரங்கன் ,திருவேங்கடவன் ஆகியோரிடத்தே கொண்ட அடிமைத் திறம் பற்றிப் பாடியதுடன்,கண்ணன் , ராமனிடத்தே ஈடுபடுகிறார்..
 திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் வேத வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கி நாராயணனின் பரத்துவத்தை நிறுவுகிறது.
 திருப்பாணாழ்வார் ,அரங்கனின் அர்ச்சைத் திருமேனி அழகில் ஈடுபடுகிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை தொண்டின் மேன்மையையும் திருநாமப் பெருமையையும் வெளிப்படுத்துகிறது.
மதுரகவி ஆழ்வார் ஆசார்ய பக்தியைத் தலைக் கட்டுகிறார்.